அதிர்ஷ்டத்துடன் சரித்திர அவமானதிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய அஷ்வின்.
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் பங்கேற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியுடன் டிசம்பர் 22 ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சாண்டோ 24, ஜாகிர் ஹசன் 15, கேப்டன் சாகிப் 16, ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியஅந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 20, கேப்டன் ராகுல் 10, புஜாரா 24, விராட் கோலி 24 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 94/4 என தடுமாறிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ரிஷப் பண்ட் சதத்தை நழுவி விட்டாலும் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் குவித்தனர்.
அடுத்து அந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் இந்தியாவை 314 ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் 2வது இன்னிங்சிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு அவுட்டானது. சாண்டோ 5, மோனிமுல் ஹைக் 5, சாகிப் 13, ரஹீம் 9 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்களும் ஜாகிர் ஹசன் 51 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதனால் 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஒருநாள் தொடரில் வரலாற்று தோல்வியை பரிசளித்த மெஹதி ஹாசன் மாயாஜால சுழலில் சிக்கி கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதனால் 45/4 என 3வது நாளின் முடிவில் திண்டாடிய இந்தியாவுக்கு இன்று 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ஜெயதேவ் உனட்கட் 13 ரன்களில் அவுட்டான போது வந்த ரிஷப் பண்ட் அடித்து நொறுக்கி காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ரன்களில் மெஹதி ஹசனிடம் அவுட்டானதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய அக்சர் பட்டேல் 34 ரன்களில் அவரிடமே அவுட்டானதால் 74/7 என தடுமாறிய இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.
இருப்பினும் அந்த சமயத்தில் களமிறங்கிய தமிழகத்தின் அஸ்வின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் 1 ரன்னில் கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் தவற விட்டதை பயன்படுத்திய அவர் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அவருடன் ஸ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரியுடன் 29* ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் அவரை விட பயப்படாமல் அட்டகாசமாக பேட்டிங் செய்த அஸ்வின் அதே மெஹதி ஹசன் ஓவரில் 6, 2, 0, 0, 4, 4 என 16 ரன்களை குவித்து மொத்தம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 46* ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார்.
அதனால் 145/7 எடுத்த இந்தியா 3 விக்கெட் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை ஒயிட் வாஷ் வெற்றியுடன் வென்றது.