தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஷ்மீர் இஸ்லாமியர்கள்!

கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் ஸ்ரீநகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர்கள் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டின. அதன் ஒரு பகுதியாக காஷ்மீரில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில் உள்ள கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் தின பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக தேவாலயங்களில் கூடினர். காஷ்மீரில் அசாத் சாலையில் உள்ள புனித கத்தோலிக் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருந்தனர். சிறப்பு பிரார்த்தனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்தன.

ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் தேவாலயத்தில் கூடினர். அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்தும், வாழ்த்துகளை பரிமாறியும் மற்றும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் கூறியதாவது: தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் மூலம் எங்களுக்குள் உள்ள மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறோம். நாங்கள் அவர்களுடன் (கிறிஸ்துவர்களுடன்) தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால் அவர்களுக்கு தனித்து இருப்பது போன்ற உணர்வு இருக்காது. அவர்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். அதனால், நாங்கள் அவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.