வடக்கில் இன்றும் மழைக்கு வாய்ப்பு! – இரவுடன் காலநிலை சீரடையும் என அறிவிப்பு.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மதியம் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவிலிருந்து திருகோணமலை நிலப்பரப்பில் தரையேறி நேற்று மத்திய மலைநாட்டில் நிலைகொண்டிருக்கும் தாழ்வு நிலையானது இன்று மதியம் மேல்மாகாணத்தை ஊடறுத்து மன்னார் வளைகுடா ஊடாக அரபிக்கடல் நோக்கி பயணிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இன்று மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது கடலில் இறங்கியதும் சற்று வலுப்பெறும் என்பதால் வெப்பக்காற்றை வடக்கு மாகாணம் ஊடாக ஈர்க்கும். இதன் காரணமாக ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மதிய வேளையில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
தொடர்ந்து தாழ்வு நிலை கடலில் மேற்கு நோக்கி வேகமாக பயணிக்கும்போது, இன்று இரவுடன் இந்த மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை முடிவுக்கு வருவதோடு, நாடுமுழுவதும் சீரான வானிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.