வேகமெடுக்கும் கோடநாடு கொலை வழக்கு.. 200 வீடியோக்கள் ஆய்வு.. போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதானவர்கள் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளதால், வழக்கை விசாரித்த போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தவழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது, கைதான 10 பேர் கடந்த 2017ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலமும், 2021 ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலமும் மாறுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், உதவி காவல் ஆய்வாளர் ராஜன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குன்னூர் போலீசார் விசாரணைக்கும், தனிப்படை விசாரணைக்கும் இடையே உள்ள முரண் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான 200 வீடியோக்களை டி.எஸ்.பி தலைமையிலான குழு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.