கல்விப்புலச் செய்திகளை ஊடகங்கள் தவறாகவெளியிடக்கூடாது. இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
கல்விப்புலச் செய்திகளை ஊடகங்கள் தவறாகவெளியிடக்கூடாது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் உள்ள அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சில வருடங்களாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வடக்கு மாகாணக்கல்வி அமைச்சும், வடமாகாணக் கல்வித் திணைக்களமும் தவறியதால் இன்று அங்குள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களை பலரும் அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நிலை தொடர்பில் வடக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கும், வடமாகாணக் கல்வித் திணைக்களத்திற்கும் பலமுறை தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அப்பாடசாலை ஆசிரியர்களை தவறாக வழிப்படுத்துவதாக ஒரிருவர் கொடுத்த செய்தியை ஊடகங்கள் சில வெளியிட்டிருப்பது வேதனையான விடயம்.
அப்பாடசாலையில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் அதில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டை ஆசிரியர்கள் மூன்று தடவைகள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும், வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளருக்கும், வடமாகாணக் கல்விப்பணிப்பாளருக்கும் எழுத்து மூலமாக கொடுத்து அனைத்து ஆசிரியர்களும் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.
ஆனால் தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதிபருக்கும், பிரதி அதிபருக்கும் ஏற்பட்ட பிணக்கினால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டதும் பொலீஸ் நிலையம்வரை சென்றதும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இதில் முழுக்க முழுக்க தவறு விட்டது வடமாகாண கல்வி அமைச்சும், வடமாகாண கல்வித்திணைக்களமுமே.
மாறாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தவறாக யாரையும் வழிநடாத்தவும் இல்லை. வழிப்படுத்தவும் இல்லை.
இத்தகைய செய்தியை வெளியிட்டு வேறு நோக்கங்களை அடைய விரும்புகின்றவர்கள் முதலில் அப்பாடசாலையில் உள்ள ஆசிரியர்களதும், மாணவர்களதும் கருத்துக்களை அறிய வேண்டும்.
இது போன்ற பல பிரச்சனைகள் தீர்வின்றி வடமாகாணத்தில் மலிந்துள்ள.
இன்று இதற்கான தீர்வை கல்வி அமைச்சு முறையாக வழங்காவிட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் தாமாக தீர்வைப்பெறும் நிலை ஏற்படும்.