துபாய், மலேசியாவில் இருந்து விமானத்தில் கொல்கத்தா வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் பீகாரில் புத்த கயாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், துபாய், மலேசியாவில் இருந்து கொல்கத்தா விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான இருவரின் மாதிரிகள் மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.