பயப்பட வேண்டாம்; மொட்டுச் சின்னத்தில்தான் போட்டி! – உள்ளூராட்சி உறுப்பினர்களிடம் பஸில் உறுதி.

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றால் – அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட்டால் ‘மொட்டு’ச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.”

இவ்வாறு மொட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழோ அல்லது வேறு ஏதேனும் பொதுச் சின்னத்தின் கீழோ போட்டியிட்டால் வெற்றி பெறுவது கஷ்டம் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

மொட்டுக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளைப் பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பஸில் பேசினார். அப்போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிராம மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரிதாக ஆதரவு இல்லை. அக்கட்சியுடன் மொட்டுக் கட்சி சேர்ந்து போட்டியிடுவதால் தமக்கு வரவிருக்கின்ற வாக்குகள் குறைவதற்கும் தமது கட்சி உறுப்பினர்கள் வேறு பக்கம் தாவுவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் அவர்கள் கூறினர்.

‘மொட்டு’ச் சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பலாம் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

“பயப்பட வேண்டாம், மொட்டுச் சின்னத்தில்தான் போட்டி” என்று அவர்களுக்குப் பஸில் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.