தமிழரசு மத்திய குழு 7 இல் மட்டக்களப்பில்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் 8 இல் கொழும்பில்..
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராயத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமாக இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும் அழைத்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த பின்னர் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை 6 ஆம் திகதி நடத்துவதாக முதலில் தீர்மானிக்கப்பட்ட போதும், அன்றைய தினம் பௌர்ணமி நாள் என்பதால் அது அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது.
இதேசமயம், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசு ஏற்பாடு செய்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னாயதமாகவே தமிழ்த் தேசியக் கட்சிகள் 8 ஆம் திகதி கொழும்பில் கூடுகின்றன.
அதேவேளை, எதிர்வ்ரும் 10 முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தின் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காகச் சம்பந்தன், சுமந்திரனை எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச குழு உத்தியோகப்பற்றற்ற வகையில் சந்தித்துப் பேசவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டத்துக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் அழைக்கப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.