தீர்வுப் பேச்சுக்கு வாழ்த்துக் கூறக் கூட சீனா மறுப்பு!
“நாம் இந்தியாவின் கலாசாரத்தை ஒத்தவர்கள் என்பதால் அதனை நாம் நாடி நிற்பது குறித்து சீனா அஞ்ச வேண்டிய தேவை கிடையாது” – இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தைச் பிரமுகர் ஒருவர் எடுத்துரைத்தார்.
இந்திய – குறிப்பாக தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவைத் தாங்கள் புரிந்துகொள்கின்றார்கள் என்று சீனப் பிரதித் தூதுவர் இதன்போது பதிலளித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று மாலை வந்த சீனாவின் பிரதித் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறுவர் நேற்றிரவு ஒரு விடுதியில் சந்தித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் போரின் போது பாதிக்கப்பட்ட தரப்புடன் அன்றி, பாதிப்பை ஏற்படுத்திய தரப்புடனேயே சீனா நின்றமை வருத்தமளிக்கின்றது என்று யாழ். பிரமுகர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
”இறுதிப் போரின்போது சீனா மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியமையும் எமக்குத் தெரியும். ஆனால், மற்ற நாடுகள் தற்போதேனும் தங்களை மாற்றிக்கொண்டாலும் சீனா இன்று வரை அதனை மாற்றவோ அல்லது பாதிப்புற்றோர் தரப்பைப் பரிவுடன் அணுகவோ தயார் இல்லை. இதேநேரம் எமக்காகக் குரல் கொடுக்க முடியாது, நாம் அரசுக்கு அரசு என்கின்ற ரீதியில்தான் செயற்பட முடியும் எனச் சீனா கருதினால், தற்போது இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இடம்பெறுகின்றது. அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்று ஒரு வாழ்த்து அறிக்கையையாவது சீனாவால் வெளியிட முடியுமா?” – என்று யாழ். பிரமுகர்களால் கேட்ட போதும் சீன அதிகாரிகள் அதற்கும் மறுத்துவிட்டனர்.