வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
அரசு பதவிகளை வகிப்பதாக அடையாள அட்டைகளை தயாரித்து நாட்டை விட்டு வெளியேற்றும் மோசடியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மேற்கொண்டு வருவதாக ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளரும், ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பயன்படுத்தி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாகவும் சுமார் நாற்பது பேர் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில், சம்பந்தப்பட்டவர்களின் கடவுச்சீட்டு நகல்கள் மற்றும் சென்று தங்கியுள்ள நாடுகளின் விபரங்களும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஒருவரிடமிருந்து 30 தொடக்கம் 45 இலட்சம் ரூபா வரையான தொகை ஒவ்வொருவரிடமிருந்து அறவிடப்படுகிறது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த நபரை நாட்டுக்கு அழைத்துச் சென்ற ஒரு நாள் கழித்து, மறுநாள் எம்.பி இலங்கை திரும்பிவிடுகிறார் எனவும் சமரசிங்க குறிப்பிடுகின்றார்.
தற்போது பிரேசில், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான ஆட்கடத்தல்கள் இலங்கை தொழிலாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை இழப்பது மட்டுமன்றி, இந்த நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.