கோட்டாவைத் தனிமைப்படுத்தக்கூடாது! – வஜிர கூறுகின்றார்.

“நாம் கோட்டாபய ராஜபக்சவைத் தனிமைப்படுத்தக்கூடாது. அவரை அரவணைக்க வேண்டும். அவரால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதிப் பதவி கிடைத்தது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
கோட்டாபய கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா பறப்பதற்கு முன்னர் வஜிர எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அரச எம்.பிக்களின் சந்திப்பு ஒன்று பத்திரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இருவரது செயற்பாடுகள்தான் அங்கு வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அவர்கள்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் எம்.பி. வஜிர அபேவர்த்தன. அவர்கள் என்ன அப்படிச் செய்தார்கள். அவர்கள் இருவரும் அனைவரிடமும் இருந்து சற்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
கோட்டாபயவின் காதுக்குள் வஜிர ஏதோ நீண்ட நேரமாக ஓதிக்கொண்டே இருந்தார். இருவரும் மிகவும் தீவிரமாக இரகசியம் பேசத் தொடங்கினார்கள்.
இதன்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் வஜிர, கோட்டாபயவைப் பற்றி இப்படிப் பேசினார். நாம் கோட்டாபயவைத் தனிமைப்படுத்தக்கூடாது. அவரை அரவணைக்க வேண்டும். அவரால்தான் ரணிலுக்கு ஜனாதிபதிப் பதவி கிடைத்தது என்றார் வஜிர – என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.