அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆதாரம் தாருங்கள்! – நீதி அமைச்சர் கோரிக்கை.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/12/wijayadasa-rajapaksha.jpg)
இலங்கைக்குப் போதைப்பொருட்களை உயர்மட்ட அரசியல்வாதிகளே கொண்டு வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படும் பின்னணியில், இதற்கு ஆதாரங்களைத் தந்தால் குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
‘இலங்கையில் மிகப்பெரிய போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின்னால் நாடாளுமன்றத்திலுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் உள்ளார்கள்’ என்று ஜே.வி.பியின் பரப்புரைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் நீதி அமைச்சரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அது பற்றி எனக்குத் தெரியாது. இதை யார் செய்தாலும் பிழைதான். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இலங்கைக்குப் போதைப்பொருள்களை அரசியல்வாதிகளே கொண்டு வருகின்றார்கள் என்பதற்குச் சரியான தகவல்களை – ஆதாரங்களை எம்மிடம் தந்தால் அவர்களுக்கு எதிராக நிச்சயம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அவர்கள் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக அவர்களுக்குச் சார்பாக நடக்கமாட்டேன். இதை வரலாற்றில் நான் நிரூபித்துக் காட்டியுள்ளேன்.
2007ஆம் ஆண்டில் நான் கோப் குழுவின் தலைவர். அப்போது நடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் ஊழலை அந்தக் குழுவின் அறிக்கையின் ஊடாக நாடாளுமன்றில் அம்பலப்படுத்தினேன்.
நான் நினைத்திருந்தால் எனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களை மாத்திரம் குற்றஞ்சாட்டி இருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. இரு தரப்பிலும் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காட்டினேன். அதனால்தான் இரு தரப்பும் சேர்ந்து என்னைத் தாக்க முற்பட்டனர். அதற்கு முன் நான் எதிர்க்கட்சிக்குத் தாவிவிட்டேன்” – என்றார்.