தாயார் மறைவு – வீடியோ கான்பரென்சிங் மூலம் அலுவல் பணிகள் பங்கேற்கும் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் வந்து, அங்கிருந்து காந்திநகரில் உள்ள தனது தாயர் தங்கியிருந்த வீட்டை அடைந்தார். அங்கு பிரதமர் மோடி தனது தாயாருக்கு இறுதி சடங்குகளை செய்தார்.

பிரதமர் மோடி தாயாரின் மறைவுக்கு முன்னணி தலைவர்கள், பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்வதாக இருந்தது. அங்கு அங்கு ஹவுராவை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம், கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய கங்கா கவுன்சிலின் 2வது கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நேரில் பங்கேற்பதாக இருந்தார்.

தாயார் திடீர் மறைவு காரணமாக மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்து குஜராத் செல்லும் சூழலுக்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டார். எனவே, மேற்கு வங்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் அலுவகம் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தது.

பிரதமர் அலுவலகம் தனது பதிவில், “இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி வீடியோ கான்பெரென்சிங் வாயிலாக பங்கேற்பார். பல்வேறு இணைப்பு திட்டங்கள், தேசிய கங்கை கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்கிறார்” என்று அறிவித்துள்ளது.

மோடி முதலமமைச்சராக இருந்த காலத்திலும் சரி, பிரதமராக பதவியேற்ற பின்பும் சரி தனது அலுவல் பணிக்கு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்யும் கொள்கையை பின்பற்றி வருகிறார். தனது தாயர் மறைந்த நாளிலும் இதை தொடர்கிறார். காலை 6 மணி அளவில் ஹீராபென்னின் மறைவு செய்தி வந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.