வாகன நம்பர் பிளேட்டுகள் மற்றும் குறைபாடு புள்ளி பற்றிய சிறப்பு அறிவிப்பு!
ஜனவரி 1, 2023 முதல் வழங்கப்படும் வாகன இலக்கத் தகடுகள் மாகாணத் தன்மையைக் கொண்டிருக்காது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வாகனப் பதிவு மற்றும் இடமாற்றத்தின் போது இலக்கத் தகட்டின் மாகாண எழுத்து அகற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சாரதி குறைபாடு புள்ளிகளை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சாரதி குறைபாடு புள்ளிகளை வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) தெரிவித்தார்.
ஒரு ஓட்டுனர் 24 குறைபாடு புள்ளிகளை பெற்றால் , அந்த சாரதியின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றார்.
அவ்வாறு ரத்து செய்யப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும், ஒரு வருடத்தின் பின்னர், புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.