சம்பிக்கவின் பிணை நிபந்தனைகளை குறைக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூல ஆவணக் கோப்பை தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்சனி டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தியபோது, இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது கட்சிக்காரர்களுக்கு பிணை தொடர்பில் விதிக்கப்பட்ட ஒரு சில நிபந்தனைகளை நீக்குமாறு, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த மேலதிக நீதிவான், பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் எவை என அறிவதற்காக, குறித்த வழக்கின் மூல ஆவணத்தைச் சரி பார்க்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேலதிக நீதிவான், மூல ஆவணக் கோப்பை அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.