யாழ். மாநகர சபைக்குப் புதிய மேயர் தெரிவா? நீதிமன்றத்தை நாடுவோம் என்று பதவி விலகிய மணி தரப்பு எச்சரிக்கை.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குப் புதிதாக மேயரைத் தெரிவு செய்ய முற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பதவியிலிருந்து விலகும் மேயர் வி.மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் கடந்த 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தை மீளச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அவர் பதவி விலகுவதாக நேற்றைய தினம் கடிதம் மூலம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
“வரவு – செலவுத் திட்டம் மீளவும் சமர்ப்பிக்கப்பட்டால் தோற்கடிக்கப்படும் என்பதால் பதவியைத் துறக்கின்றேன்” என்று மணிவண்ணன் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய மேயருக்கான தெரிவு இடம்பெறுமாக இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்றதை நாடுவோம் என்று மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே ( ஆனோல்ட் மேயராக இருந்த காலத்தில்) இரண்டு தடவைகள் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு தடவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகர சபைக் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக, சபை கலைக்கப்படவேண்டும். அதற்கு முரணாக மேயர் தெரிவை நடத்த முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம் ” – என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.