பண்ட் மதுபோதையில் இருந்தாரா? எப்படி 200கிமீ ஓட்ட முடியும்? முக்கியத் தகவல் சொன்ன போலீசார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இவர் இரு நாள்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்ற போது ரிஷப் பண்ட்டின் கார் சாலை தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது .
படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளார். காயங்களுடன் சாலையில் கிடந்த ரிஷப் பண்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்ட் தானே காரை ஓட்டிக்கொண்டு தனியாக பயணம் செய்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன. ரிஷப் பண்ட் அதிவேகமாக கார் ஓட்டினாரா, விபத்தின் போது மதுபோதையில் இருந்தாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது.
இதற்கு உத்தரகாண்ட் காவல்துறை உரிய விளக்கம் தந்துள்ளது.இந்த விபத்து குறித்து ஹரித்துவார் காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறியதாவது, “உபி எல்லையில் இருந்து விபத்து நடத்த இடம் வரை ரிஷப் பண்ட் கார் பயணத்தின் சிசிடிவி வீடியோக்களை நாங்கள் ஆராய்ந்தோம். அந்த கார் எந்த இடத்திலும் 80 கிமீ வேக வரம்பை கடக்கவில்லை. டிவைடரில் மோதி பறந்ததால் கார் அதிவேகமாக சென்றது போல தென்படுகிறது.
அதேபோல், ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து 200 கிமீ தூரம் சரியாக ஓட்டி வந்துள்ளார். அவர் மது போதையில் இருந்தால் எப்படி இவ்வளவு தூரம் சரியாக பயணத்திருக்க முடியும்.மேலும், கார் தீப்பற்றிய உடன் கண்ணடியை உடைத்து அவர் வெளியேறியுள்ளார். போதையில் இருக்கும் நபரால் இவ்வாறு வெளியேறி இருக்க முடியாது.
அவருக்கு முதலுதவி கொடுத்த ரூக்ரி மருத்துவர்களும் அவர் நர்மலாக தான் இருந்தார் என்றனர். எனவே, ரிஷப் பண்ட் ஓவர் ஸ்பீடாகவும் வரவில்லை, மதுபோதையிலும் இல்லை” என்று விளக்கமளித்தார். உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நன்கு தேறி வருவதாக அவரை மருத்துவமனையில் சந்தித்த உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்தனர்.