மெக்சிகோ சிறையில் மர்மநபர்கள் துப்பாக்கிசூடு- கைதிகள் உள்பட 14 பேர் பலி.
மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.
இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.