தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கிடைக்கும்வரை சளைக்காமல் போராடுவோம்!
“தமிழர்கள் மீதான படுகொலை உள்ளிட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியை நாம் பெறும் வரை அயராது தொடர்ந்து போராடுவோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் மீதான இலங்கை அரச படைகளின் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின் உருவப்படத்துக்குச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சிவாஜிலிங்கம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரைப் பகுதியில் பொழுது போக்குக்காகக் கூடியிருந்த ஜந்து தமிழ் மாணவர்கள் விசேட அதிரடிப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வே இன்று நடைபெற்றது.