நேற்று துப்பாக்கிச்சூடு.. இன்று குண்டுவெடிப்பு.. காஷ்மீரின் டாங்கிரி கிராமத்தில் பதட்டம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி பகுதியிலுள்ள டாங்கிரி கிராமத்தில் நேற்று நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கு அடுத்தடுத்துள்ள 3 வீடுகளில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ராணுவம், துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டனர். காடுகளில் புகுந்தும், ட்ரோன்கள் மூலமாகவும் தீவிரவாதிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டின் அருகே இன்று திடீரென குண்டு வெடித்தது. அதில் படுகாயமடைந்த குழந்தை ஒன்று உயிரிழந்தது. 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு இடத்தில் இருந்த குண்டு, வெடிகுண்டு நிபுணர்களால் கைப்பற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாக காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.