2023ல் , 3ம் உலகப் போர் தொடர்பான அச்சம்
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறக்கும் போதும் தங்கள் வாழ்வில் விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே சாமானிய மக்களின் வாழ்வு கழிகிறது.
புத்தாண்டுப் பிறப்போடு கடந்த காலத்தில் தங்கள் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, அத்தகைய எதிர்பார்ப்பு தொடரவே செய்கின்றது. நாட்காட்டியில் உள்ள ஏதோ ஒரு திகதியைப் போலவே புத்தாண்டு தினமும் என்பதே நிஜ வாழ்வில் யதார்த்தமாக இருந்த போதிலும் ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதும், ஏமாறுவதுமாக மக்களின் வாழ்க்கை தொடர்கிறது. 2023 உம் அதற்கு விதிவிலக்கானதல்ல.
மூன்றாம் உலகப் போர் தொடர்பான அச்சத்துடனேயே இந்தப் புத்தாண்டு உதயமாகின்றது.
உக்ரைன் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ காட்டிவரும் தொடர்ச்சியான, இடைவிடாத தலையீடு ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான மோதலாக உருவெடுக்குமோ என்ற அச்சம் முன்னெப்போதையும் விடவும் தற்போது அதிகமாக உள்ளது. இத்தகைய ஒரு மோதல் உருவாகுமாக இருந்தால் – அதிலும் அணுவாயுத வல்லமை கொண்ட சக்திகள் தங்களிடம் உள்ள அணுவாயுதங்களை ஒருவர் மீது மற்றவர் பாவிப்பது என்ற முடிவுக்கு வந்தால் – அது உலக அழிவுக்கே வித்திடும் என்பதைத் தெரிந்து கொண்டும் தனது சண்டித்தனமான நடவடிக்கைகளைக் கைவிட அமெரிக்காவோ, நேட்டோவோ தயாராக இல்லாத சூழலையே தொடர்ந்தும் அவதானிக்க முடிகின்றது.
உக்ரைன் போர் பெப்ரவரி மாதத்தில் ஒரு வருடத்தை எட்டவுள்ள நிலையில் போர்முனையில் தீர்க்கமான ஒரு வெற்றியைப் பதிவு செய்துவிட ரஸ்யா முயற்சிக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதேபோன்று அத்தகைய ஒரு வெற்றி ரஸ்யாவுக்குக் கிடைத்து விடுவதைத் தடுப்பதற்கு உக்ரைனும், நேட்டோவும் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதுவும் எதிர்பார்க்கக் கூடியதே.
இந்தப் பலப்பரீட்சையில் சிக்கித் தவிப்பது சாமானிய மக்களே. பகடைக்காய்களாகப் பந்தாடப்படும் அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பீடுகளின் பிரகாரம் ஒரு கோடி வரையான உக்ரைன் மக்கள் சொந்த வாழிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக மாறி உள்ளனர்.
இந்தப் பிரச்சனைக்கே இன்னமும் முறையான தீர்வு ஒன்றைக் கண்டிட முடியாத நிலையில் உள்ள மேற்குலகம் மறுபுறம் தாய்வான் பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு சீனாவுடன் ஒரு போர்முனையைத் திறந்துவிட துடியாய்த் துடிக்கிறது.
மேற்கில் ரஸ்யாவுக்கு எதிராக எவ்வாறு உக்ரைன் தூண்டிவிடப் பட்டதோ அவ்வாறே கிழக்கில் சீனாவுக்கு எதிராக தாய்வான் தூண்டிவிடப்படுகின்றது. அது தற்போது இருப்பதைப் போல நீறு பூத்த நெருப்பாக இருக்குமா அல்லது உக்ரைனைப் போல பெரும் போராக வெடிக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.
பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடான யேமனில் தொடரும் உள்நாட்டு யுத்தம் ஏற்கனவே வறுமையின் பிடியில் இருந்த அந்த நாட்டை அதல பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்குப் பிராந்திய வல்லரசுகளாக விளங்கும் சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டிக்களமாக விளங்கும் இந்தப் போர்முனையில் அமைதி ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் கிட்டிய எதிர்காலத்தில் தென்படவில்லை.
சிரியா, ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலி, கொங்கோ, சோமாலியா, எதியோப்பியா என உலகின் பல பாகங்களிலும் ஆயுத மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய மோதல்கள் அனைத்திலும் உள்ள பொதுவான ஒற்றுமை இந்த மோதல்களில் அமெரிக்கத் தலையீடு ஏதோ ஒரு வடிவில் உள்ளது என்பதே. அனைத்து மோதல்களிலும் உயிர் இழப்புகளையும், சொத்து அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொது மக்களாக இருக்க, இலாபம் ஈட்டுபவர்களாக ஆயுத வியாபாரிகளும் இடைத் தரகர்களும் உள்ளனர்.
மறுபுறம், ஆபிரிக்கக் கண்டத்தில் பட்டினி அபாயம் தொடர்பான செய்திகள் வெளியாகி பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. நிலையான அரசாங்கமே இல்லாத ஒரு நாடாக விளங்கும் சோமாலியாவில் பட்டினி அபாயம் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றது. அந்த நாட்டு மக்களைப் பட்டினி நிலையில் இருந்து மீட்பதற்கான நிதியுதவியை ஐ.நா. மன்றம் கோரியுள்ள போதிலும் அதற்கு ஆதரவு வழங்க விரும்பாத நிலையிலேயே உலகின் செல்வந்த நாடுகள் உள்ளன என்பது மனிதநேயத்தை ஆதரிக்கும் மக்களுக்குக் கசப்பான செய்தியாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப் படைத்த கொரோனாக் கொள்ளை நோய் அபாயம் முடிவுக்கு வருகின்றது என்ற அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒருசில நாட்களிலேயே சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாத் தாக்கம் அதிகரித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி பீதியைக் கிளப்பி உள்ளன. அதிகரித்து வரும் கொரோனாப் பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு, உள்ளிருப்பு நடவடிக்கைகளை அனுபவிக்க நேருமோ என்ற அச்சம் உலகளாவிய அடிப்படையில் உருவாகி உள்ளமையை மறுப்பதற்கில்லை.
போதாதற்கு, இயற்கையின் சீற்றமும் புதிய ஆண்டில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதைக் கட்டியம் கூறும் வகையிலேயே நிலைமைகள் மற்றும் எதிர்வு கூறல்கள் உள்ளன. வெள்ளம், புயல், பனிப் பொழிவு, பூகம்பம், நிலநடுக்கம் என 2023ஆம் ஆண்டு இயற்கையின் சீற்றத்தைத் தரிசிக்கும் ஆண்டாகவே விளங்கும் என நிச்சயம் நம்பலாம். இயற்கைக்கு மாறான, இயற்கையின் சமநிலையைக் குழப்பும் வகையிலான செயற்பாடுகளை மனிதன் தங்குதடையின்றித் தொடர்ந்து வரும் நிலையில் இயற்கையின் பதிலடி இவ்வாறுதான் அமையும் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே.
எந்தப் பக்கம் திரும்பினாலும் உலகின் அனைத்து முனைகளிலும் நப்பிக்கையற்ற காட்சிகளே தென்படுகின்றன. ஆனால், வாழ்க்கை தொடர்ந்தே ஆக வேண்டும். உலகம் இவ்வாறு இருக்கின்றது என்பதற்காக எமது வாழ்க்கையை நாம் முடித்துக் கொள்ள முடியாது. சவால்களை எதிர்கொண்டு முன்னேற தன்னம்பிகையை வளர்த்துக் கொண்டு போராட வேண்டும். இதனைத் தனித்துச் செய்வதை விடவும் இணைந்து செயற்படுவதன் ஊடாக விரைவான, வலுவான தீர்வுகளை எட்ட முடியும். அதுவே 2023ஆம் ஆண்டுக்கான செய்தியாக அமைகிறது.