பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ள காயத்ரி ரகுராம்!
பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. அவருடன் நிர்வாகிகள் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சிதலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்த காயத்ரி ரகுராம் என் மீது அன்பு கொண்டவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் அவர்களை தடுக்க முடியாது என ட்வீட் செய்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுமான் இன்று ட்விட்டரில் அதிரடியாக அறிவித்துள்ளார். “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் ” என தனது பதிவில் காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காய்த்ரி ரகுராம். “அண்ணாமலை தலைவராக வந்த பிறகு தான் பெண்களுக்கு பிரச்னைகள் வருகிறது. தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன் தலைவராக இருந்த போது இதுபோன்ற பிரச்னை வந்தது இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக பல பிரச்னைகளை சந்தித்து வந்தேன். அதற்கான முறையாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரணை இல்லாமல் என்னை தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
இதற்கு முன்பு வீடியோ ஆடியோ பிரச்னை பாஜகவில் எப்போது வந்தது. நான் கலகம் செய்து விட்டேன் என்று சொல்கிறார். இவர் எவ்வளவோ கலகம் செய்து வருகிறார். நான் தவறு செய்தால் என்னிடன் ஆதாரத்துடன் தெரிவியுங்கள், அண்ணாமலை எப்போதுமே ஆதாரம் இல்லாமல் தான் பேசுகிறார். இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.