இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் உலக கோப்பைக்கு உதவும்- தசுன் ஷனகா.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட்தொடர் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் மைதானங்கள் குறித்து நாங்கள் அறிவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும்.
உலகக்கோப்பை தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முக்கியமானவை. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் இது எங்களுக்கு மிக முக்கியமான தொடர்.
இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும். அதுவும் எங்கள் வீரர்களுக்கு சாதகமாக அமையும். உலகக்கோப்பை டி20 தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி பலமாக உள்ளது.
அதனை வெல்ல மிக சிறப்பாக இலங்கை விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். இலங்கையில் நடந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) இளம் வீரர்களை அடையாளம் காண உதவியது.
இதில் கிடைத்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும். ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டவை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் – தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் ராஜதுஞ்சனா, டில்ஷான் மதுஞ்சனகா, டில்ஷான் மதுஞ்சன, மதுஷான், லஹிரு குமாரா, நுவன் துஷாரா