ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கான வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் வகையில், வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சுய ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்தி, அதனை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை அமைப்பில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஏதாவது குறைகள் ஏற்பட்டால், அதற்கான வழிமுறைகளை உருவாக்கி, சுயஒழுங்குமுறை அமைப்பு தீர்வுகாண வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரும் 17-ம் தேதிக்குள் பொதுமக்கள், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டத்தில் ஈடுபட அனுமதியில்லை என்று கூறினார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிகள், அடுத்த மாத தொடக்கத்தில் இறுதிசெய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.