உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்! – சுமந்திரன் எச்சரிக்கை.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுப்பதற்குச் சில முயற்சிகள் நடக்கக் கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்றத்தை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தைக் கொடுப்போம்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் கூறுகையில்
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடக் கூடாது, அது ஜனநாயகத்தை மீறுகின்ற செயல் எனத் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கின்றோம்.
அரசு இந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்தவேளையில் இதனைத் தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக் கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்பட்டால் உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தை நாடி, சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தைக் கொடுப்போம்.
சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன்வருமாறு கோரியிருக்கின்றோம்.
இந்தத் தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.