விமான நிலையத்தில் சட்டையை கழற்றி பாதுகாப்பு சோதனை? இளம்பெண் புகாரால் பரபரப்பு!
பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது தனது சட்டையை கழற்றச் சொல்லி தன்னை அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி ஒரு பெண் செவ்வாய்கிழமை மாலை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு இசைக்கலைஞர் ஒருவர் வேறு ஊருக்கு செல்வதற்காக பெங்களூரு விமான நிலையம் வந்துள்ளார். அப்போது பொருட்கள் மற்றும் பாதுகாப்பு சோதனை நடந்துள்ளது. பொருட்களை சோதனை செய்த பின்னர், ஆட்களை சோதனை செய்யும் போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த பெண்ணின் மேலாடையை கழற்ற சொல்லியுள்ளனர். இது அவரை பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து செவ்வாய் மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் விமான நிலையம் குறித்தும் சிஐஎஸ்எஃப் செயல் குறித்தும் குற்றம் சாட்டி பதிவிட்டார். மேலும் பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்ல ஒரு பெண் ஏன் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இது குறித்து விசாரித்து பின்னர் அந்த பெண்ணின் ட்வீட்டுக்கு “ஏற்பட்ட தொந்தரவுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்ததை தெரிவிக்கிறோம். பாதுகாப்பு சோதனைக்காக ஜாக்கெட், கோட் உள்ளிட்ட ஆடைகளை சோதனை செய்வது மட்டுமே வழக்கம். இது நடந்திருக்கக்கூடாது” என்று பதில் கூறியது.
மேலும் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இருப்பினும், புதன்கிழமை காலை, புகாரை எழுப்பிய பெண்ணின் சுயவிவரம் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.