கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட தற்போது வேலையின்மை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவிப்பு
கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக CMIE வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை மறுத்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
CMIE அமைப்பு வேலைவாய்ப்புகள் இல்லாதவர் குறித்து மாதந்தோறும் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 8 விழுக்காடாக இருந்த வேலை இல்லாதவர்களின் விகிதம் தற்போது 0.3 விழுக்காடு உயர்ந்து 8.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
மேலும் மத்திய புள்ளியியல் துறை தகவலின்படி, கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட தற்போது வேலையின்மை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு 8.3 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2022-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.