சீனாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்த சாலமன் தீவில் மீண்டும் தூதரகத்தை திறக்க அமெரிக்கா முடிவு.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிக்கம் அதிகரித்து வருகிறது. போர் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்துவதும், பசுபிக் தீவுகளில் தனது செல்வாக்கை நிலைப்படுத்த பல்வேறு வேலைகளையும் சீனா செய்து வருகிறது.
பசுபிக் தீவுகளில் உள்ள நாடுகளிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் அந்த நாடுகளுக்கு பல்வேறு உதவிகள், கட்டமைப்புகளை அங்கு ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலமன் தீவுடன் சீனா ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டது.
தொடர்ந்து பசுபிக் தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அமெரிக்கா சில ராஜதந்திர வேலைகளை செய்து வந்தது. பசுபிக் தீவுகளில் உள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அமெரிக்கா ஒரு உச்சி மாநாட்டை நடத்தியதுடன், பல்வேறு நிதிகளையும் வழங்குவதாக தெரிவித்து இருந்தது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சீனாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ளும் வகையில் மீண்டும் சாலமன் தீவுகளில் தனது தூதரகத்தை திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முதலில் அங்கு 2 தூதரகங்களை திறக்க உள்ளது. அதில் 2 அமெரிக்கர்கள் மற்றும் 5 உள்ளூர் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக திறம்பட கையாளவும், அங்கு தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் ராஜதந்திர வேலையாக இதனை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
1993-ல் சாலமன் தீவுகளில் இருந்த தூதரகத்தை மூடிய அமெரிக்கா, அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.