தமிழரை ஏமாற்ற முயன்றால் போராட்டம் வெடித்தே தீரும்! – அரசுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை.
“எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்பதில் எமக்கும் நம்பிக்கையில்லாமல்தான் ஜனாதிபதியுடனான பேச்சில் பங்கேற்கின்றோம். ஆனால், அரசு இந்தக் கால எல்லைக்குள் தீர்வு காண்பதாகக் கூறுகின்றது. எனவே, இந்த கால எல்லைக்குள் இனப் பிரச்சினைக்காண தீர்வை அரசு வழங்காது எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முயன்றால் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம். இதனை நாம் விடுக்கும் எச்சரிக்கையாக அரசு கருத்தில் எடுக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,
“கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டு, சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி சர்வகட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தரப்பினர் முற்போக்கான பல சிறந்த விடயங்களை முன்வைத்தனர்.
பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல விடயங்களை எடுத்துரைத்துள்ளோம். அரசியல் தீர்வு ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வைக் கோருகின்றோம். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகக் கோரி நிற்கின்றது. அர்த்தமற்ற அரசியல் தீர்வு அவசியமற்றது. அதனை யாரும் கோரப்போவதுமில்லை; ஏற்கப்பபோவதுமில்லை.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆரம்ப காலத்தில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த யோசனைகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. ஆகவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண புதிதாக திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை கிடையாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களைச் செயற்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.
பல வருடங்களாக இனப்பிரச்சினைக்குக் கிடைக்காத தீர்வு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்துக்குள் அதாவது ஒரு மத காலத்துக்குள் கிடைக்குமா எனப் பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாமல்தான் நாமும் கலந்துகொள்கின்றோம். அதனை அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
தீர்வுத் திட்ட விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை என்ற பழிச்சொல் கூட்டமைப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால்தான் பேச்சில் பங்கேற்கின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் இதயசுத்தியுடன் பேச்சில் கலந்துகொள்கின்றோம். வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அந்தக் கால எல்லைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் அதன் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.
அரசியல் தீர்வு வழங்குவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு பிறகு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தமிழர்களை ஏமாற்றும் வகையில் சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவினால் அது அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறுகிய காலத்துக்குள் அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்டு எமமையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் அரசு செயற்பட்டால் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம். 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாகக் குறிப்பிட்ட அரசுக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இதனை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.