மத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை! – நீதி அமைச்சர் உறுதி.
வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும், சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
புனித தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் கடும் கண்டனங்களை நேற்று சபையில் வெளியிட்ட எம்.பிக்கள், அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவெனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புனித தலதா மாளிகை என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல உலகம் முழுவதும் வாழும் பௌத்த மக்களின் அடையாளம். எனவே, தலதா மாளிகையை அவமதிக்க, இந்த உலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சேபால் அமரசிங்கஎன்பவர் மிகவும் வெட்கக்கேடான வகையில் தலதா மாளிகையை அவமானப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, பௌத்த உயர்பீடமும்,பௌத்த மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கை அரசமைப்பின்படி ஒருவர், தம்மை நாத்திகன் என்று கூற உரிமை உண்டு. அதனை நாம் தடுக்கப்போவதில்லை. தாம் ஒரு சித்த சுயாதீனமற்றவர் என்று கூறவும் அவருக்கு உரிமை உண்டு. அதிலும் யாரும் தலையிட முடியாது எனினும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். இது ஒரு சமூக விரோதக் குழுவின் செயற்பாட்டை ஒத்ததாக உள்ளது.
அத்துடன் இது குற்றவியல் சட்டம், பிரிவு 290 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றகும். இதனடிப்படையில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்தல், மத நிந்தனை என்பவற்றுக்கு 10 வருட கடூழியச் சிறைத் தண்டனையையும் விதிக்க முடியும்.
எனவே, வடக்கு கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலுவோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அந்தவகையில் தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.
இதனை தொடர்ந்து கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி.,
“சேபால் அமரசிங்க என்ற குறித்த நபர் கோட்டாபய ராஜபக்ச அரசில் கூட்டுத்தாபனம் ஒன்றின் தலைவராக இருந்தார். எனவே இது அரசின் ஒரு கிளர்ச்சி முயற்சியாக இருக்க முடியும்” – என்றார்.
எனினும் இதனை மறுத்த, அமைச்சர் மஹிந்த அமரவீர, “அப்படியான ஒருவர் எந்தவொரு கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் செயற்படவில்லை. அவர் பதவி வகித்திருப்பின் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அவருக்குக் காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்பு இருக்கலாம் என்பதே எனது கருத்து” – என்றார்.