ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக டெல்லியில் நில அதிர்வு.. ஷாக்கில் மக்கள்!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் நேற்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் டெல்லிவாசிகள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமே டெல்லி நிலநடுக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு நேற்றிரவு 7.55 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளியாக இது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானின் பைசாபாத்திற்கு 79 கி.மீ. தெற்கே பூமிக்கு அடியில் 200 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கமே டெல்லி மற்றும் அதிர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு காணப்பட்டது. இந்த நில அதிர்வு பீதியால் டெல்லி வாசிகள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துனர். சிறிது நேரம் கழித்து ஆசுவாசம் அடைந்ததும் வீட்டிற்குள் சென்றனர்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று இரவு ஹரியானாவின் ஜஜ்ஜாரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதன் தாக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. அதேபோல் கடந்த நவம்பர் 12ஆம் தேதியும் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது. இது போன்ற தொடர் நில அதிர்வுகளால் டெல்லி வாசிகள் பீதியில் உள்ளனர். அதேவேளை, இதனால் சேதங்கள் ஏதும் இதுவரை ஏற்படவில்லை.