சங்கர் மிஸ்ராவின் செயல் அநாகரீகமானது – வேலையை விட்டு நீக்கிய வெல்ஸ் பார்கோ நிறுவனம்!
கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மது போதையில் இருந்த ஒரு நபர் 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விமான உதவியாளர்களிடம் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரத்துடன் ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனது நேர்ந்த அவலம் குறித்து கடிதம் மூலம் புகார் அளித்த நிலையில் விஷயம் அம்பலமானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. முதல் கட்டமாக அந்த நபர் ஏர் இந்தியா விமானத்தில் 30 நாள் பயணம் செய்ய தடை விதித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இவர் வெல்ஸ் பார்கோ எனும் நிறுனத்தில் பணியாற்றி வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் நிலையில், சங்கர் மிஸ்ரா தலைமறைவானார். தொடர்ந்து காவல்துறை இவரின் புகைப்படத்தை வெளியிட்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இவர் விமானத்தில் செய்த அத்துமீறல் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் கவனத்திற்கு தெரியவரவே, சங்கர் மிஸ்ராவை வேலையை விட்டு நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் தொழில்முறையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி உயரிய நடத்தையை பின்பற்றும் தன்மை கொண்டவர்கள்.
அப்படி இருக்க சங்கர் மிஸ்ராவின் செயல் அநாகரீகமானது. அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கின்றன. இது அவமானத்திற்குரியது. எனவே, இவர் வெல்ஸ் பார்கோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள சங்கர் மிஸ்ரா தேடப்பட்டு வரும் நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.