கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் இருந்த பங்காளிகளில் இணையலாம்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைக்கக்கூடாது. தேவையென்றால், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் எந்தப் பங்காளிக் கட்சியில் இருந்தார்களோ, அந்தக் கட்சிகளில் இணைந்துகொள்ளலாம்” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்து விலகிச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியை மீண்டும் கூட்டமைப்பில் இணைப்பதா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பைப் பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் எனக் கோரி அதன் பங்காளிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் தலைவர்களால் அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் எந்தப் பங்காளிக் கட்சியில் இருந்தார்களோ, அந்தக் கட்சிகளில் இணைந்துகொள்ளலாம் என்றும், உதாரணத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்றும், என்.சிறிகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் ரெலோவில் இணைந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
அத்துடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்து விலகிச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை மீண்டும் கூட்டமைப்பில் இணைப்பதா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடித் தீர்மானம் எடுக்கும் என்றும் கூறப்பட்டது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் இதன்போது தெரிவித்தார். எனினும், இது குறித்து கருத்துப் பரிமாறப்படவில்லை.