‘மூழ்கிக் கொண்டிருக்கும்’ இமயமலை நகரம்….கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு பரிந்துரை!
கடந்த சில நாட்களாக நிலச்சரிவு, விரிசல்கள் ஏற்படுவதால் ‘மூழ்கிக் கொண்டிருக்கும்’ இமயமலை நகரமான ஜோஷிமத்தில், மோசன நிலையில் இருக்கும் கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.
வடக்கு உத்தரகாண்டில் சுமார் 17,000 மக்கள் வசிக்கும் நகரமான ஜோஷிமத், இந்து மற்றும் சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கான நுழைவாயிலாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நிலத்தில் விரிசல்கள், நிலங்கள் புதையும் நிகழ்வுகள் நடந்து வருகிறது.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சனிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். நிலத்தின் உள்ளே இருந்து தண்ணீர் கசிந்ததால் வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, நிலவிரிசல்களுக்கான காரணத்தைக் கண்டறிய குவஹாத்தி இன்ஸ்டிட்யூட், ஐஐடி ரூர்க்கி மற்றும் இஸ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
“மக்களை இங்கிருந்து இடம்பெயர்ந்து புனர்வாழ்வளிக்க தகுந்த இடத்தை ஏற்பாடு செய்து வருகிறோம் . அதோடு தற்போதைய குளிர்காலமானதால் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், ”என்று கூறினார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில், ஜோஷிமத்தில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதம் ₹ 4,000 வீதம் வீடு வாடகைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் விரிசல்கள் குறித்து ஆய்வு செய்த பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ரஞ்சித் சின்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட நிபுணர் குழு, ஜோஷிமத்தில் அதிகபட்ச சேதம் உள்ள வீடுகளை இடிக்க வேண்டும், வசிக்கத் தகுதியான பகுதிகளை கண்டறிந்து, ஆபத்தில் உள்ள மக்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் ” என பரிந்துரைத்துள்ளது