5 மணி நேர போராட்டம்..உயிர் காத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு
பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் விஷ்வராஜ் வெமாலா. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் கல்லீரல் நிபுணராவார். மருத்துவர் விஷ்வராஜ் கடந்த நவம்பர் மாதம் லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.
இந்த விமானப் பயணம் சுமார் 10 மணி நேரம் ஆகும். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமான பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அந்த பயணி மயக்கமடைந்து சரிந்து விழுந்துள்ளார். பதறிப்போன விமான ஊழியர்கள் மருத்துவர்கள் யாரேனும் உள்ளனரா என விசாரித்துள்ளனர். விவரத்தை கேட்டதும் மருத்துவர் விஷ்வராஜ், மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி கொடுக்கத் தொடங்கினார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து கொண்ட மருத்துவர் விஷ்வராஜ் விமான ஊழியர்களிடம் அவசர முதலுதவி கருவிகள் உள்ளதா என விசாரித்துள்ளார். நல்வாய்ப்பாக சில முக்கிய முதலுதவி கருவிகள் கிடைத்துள்ளன. அதை வைத்து மருத்துவர் விஷ்வராஜ் கொடுத்த சிகிச்சையில் பயணிக்கு நினைவு திருப்பியது. சிறிது நேரம் இயல்பு நிலைக்கு திரும்பிய பயணிக்கு மீண்டும் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறையும் மருத்துவர் விஷ்வராஜ் பயணிக்கு விடாமல் சிகிச்சை தந்து இந்தியாவுக்கு வரும் வரை அவரின் உயிரை காப்பாற்றி வைத்துள்ளார். இந்திய பகுதிக்கு வந்ததும் விமானத்தை மும்பையில் அவசர தரையிறக்கம் செய்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் விமானம் பெங்களூருவுக்கு சென்றுள்ளது. இரு முறை மாரடைப்பு வந்த பயணியின் உயிரை இக்கட்டான சூழலில் காப்பாற்றி கொடுத்த மருத்துவர் விஷ்வராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. பிரிட்டன் பிர்மிங்ஹாம் மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவரை பாராட்டி பதிவிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர் விஷ்வராஜ் கூறுகையில்,”விமானத்தில் நல்வாய்ப்பாக சில அவசர முதலுதவி உபகரணங்கள் கிடைத்து. இதன் மூலம் தான் அவரை உயிருடன் வைத்திருக்க முடிந்தது. பயணத்தில் 5 மணிநேரம் அவரை உயிருடன் தக்க வைக்க போராடினோம். மும்பை வந்து சேர்ந்துவிட்டோம் என்ற செய்தி கிடைத்தபோது தான் பயணிகள் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.
சிகிச்சை பெற்ற பயணி எனக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடன் எனது அம்மாவும் விமானத்தில் வந்துள்ளார். ஏழு ஆண்டுக்காலத்தில் முதல்முறையாக நான் வேலை செய்யும் நடவடிக்கைகளை அவர் அருகே இருந்து பார்த்தார். அதுவும் எனக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது” என்று தெரிவித்தார்.