சூரியகுமார் யாதவ் என்னோட பேட்டிங்கை பாத்ததில்லைன்னு நினைக்கிறேன்.. அதான் இப்படி ஆடுறான்.
சூரியகுமார் யாதவ் என்னோட பேட்டிங்கை பார்த்து வளரவில்லை என நன்றாக தெரிகிறது என்று ராகுல் டிராவிட் கிண்டலடித்துள்ளார்.
இலங்கை அணியுடன் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 228 ரன்கள் அடித்தது.
இந்திய அணி இத்தகைய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ‘மிஸ்டர் 360’ என செல்லமாக அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ். அவர் 45 பந்துகளில் சதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்திருந்தார்.
டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். 2022ல் இருந்த ஃபார்மை மீண்டும் 2023 இல் தொடர்ந்துள்ளார்.
இறுதியில் இந்திய அணி 137 ரன்களுக்கு இலங்கை அணியை ஆல்-அவுட் செய்து, 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி முடிந்த பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பேசிக் கொண்டனர். அப்போது ராகுல் டிராவிட் எதார்த்தமாக சூரியகுமார் யாதவ்-இன் பேட்டிங்கை தனது பேட்டிங் உடன் ஒப்பிட்டு கிண்டலடித்து இருக்கிறார். ராகுல் டிராவிட் பேசியதாவது:
சூரியகுமார் யாதவ் சிறுவயதில் எனது பேட்டிங்கை பார்த்து வளரவில்லை என்பது அவர் இன்று விளையாடியதன் மூலம் நன்றாக தெரிந்தது. கட்டாயம் எனது பேட்டிங்கை பார்த்திருக்க மாட்டார். அப்படித்தானே சூரியகுமார்?.” என கூறினார்.
இதற்கு அருகில் இருந்த சூரியகுமார் யாதவ் பதில் அளிக்கையில், “யார்தான் உங்களது பேட்டிங் பார்த்து வளர்ந்திருக்க மாட்டார். கட்டாயம் நான் உங்களது பேட்டிங்கை பார்த்திருக்கிறேன்.” என சிரித்தபடி பதில் அளித்தார்.
மேலும் பேசிய சூரியகுமார் யாதவ், “நான் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் எனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணம் ராகுல் டிராவிட் தான். அவர் ஒவ்வொரு முறையும் என்னிடம் எந்தவித அழுத்தமும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உள்ளே சென்று உனது இயல்பான ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்து, அதுதான் உனது 100 சதவீதம் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும் என்பார். கடந்த வருடமும் அந்த சுதந்திரம் எனக்கு கிடைத்தது. இந்த வருடமும் அதே சுதந்திரம் எனக்கு இருக்கிறது.” என பேசினார்.