பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக விரைவில் உருவெடுக்கும் கூட்டமைப்பு தமிழரசின் தீர்மானத்தைக் கண்டித்து ரெலோ அதிரடி அறிவிப்பு.
தமிழ்த் தேசியகி கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு எதிராக மேற்படி தீர்மானத்தைப் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசு நிறைவேற்றியிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்தார்.
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உருவாகும். யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம்” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.