மொனராகலை ASP சிசில குமார, கஞ்சாவுடன் கைது!
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் நேற்று (08) மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உலர் கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண விசேட புலனாய்வுக் குழுவினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை சோதனையிட்டதில் 15 கிலோ கிராம் உலர் கஞ்சா அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குறித்த பகுதியில் புதையல்களை தேடும் குழுவொன்றை வைத்து புதையல் தோண்டும் வேலைகளை முன்னெடுத்து வருவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அவர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வந்ததாகவும், அண்மையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தின் பலமான அரசியல்வாதி ஒருவரின் ஆதரவை அவர் தொடர்ந்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் எனவும், மேலும் ஈஸ்டர் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு பீடாதிபதிகளிடம் கேட்க வந்த பொலிஸ் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.