மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தை இன்னமும் ஒப்படைக்காத காதர் மஸ்தான்!
மன்னார் மாவட்ட முன்னாள் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜாங்க அமைச்சர் கா. காதர் மஸ்தான், மாவட்ட செயலகத்தில் ஒதுக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மன்னார் மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் நியமிக்கப்படவில்லை. ஆனாலும், முன்னர் தான் பயன்படுத்திய ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்.
ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்ட அரச பணியாளர்களும் அங்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.