படகு பழுதடைந்ததால் தனித்தீவில் சிக்கிய மீனவர்கள்…தேங்காய் தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ள சம்பவம்
2013ஆம் ஆண்டு தமிழில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகன் ஜெய் உள்பட 4 பேர் ஒரு கடல் தீவில் மாட்டிக்கொள்வார்கள். அங்கு அவர்கள் உயிர் வாழ்ந்தது எப்படி, எப்படி தீவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதுதான் கதை. அதேபோன்றதொரு சம்பவம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கே நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 9 மீனவர்களும் என 14 பேர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆழ்கடல் மீன் பிடிப்பவர்கள் வழக்கமாக 25 நாட்கள் மட்டுமே கடலில் தங்குவர் என்றாலும் 35 நாட்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தனர். பயணத்தை தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் படகால் பல சோதனைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தனர் மீனவர்கள். இதுதொடர்பாக படகில் பயணித்த மீனவர் சின்னையன் கூறுகையில், “எங்களது படகு கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் மைல் தூரம் இருந்த நிலையில், படகை இயக்குவதற்கான கியர் பாக்ஸ் திடீரென உடைந்துவிட்டது. மூன்று நாட்களாக ஒரே இடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தோம். அந்த சமயம் அங்கு வந்த இலங்கைக் படகு ஒன்றை நாடி அவர்களின் உதவியுடன் கியர் பாக்ஸை கரைக்கு எடுத்துச் சென்று ஒரு மீனவர் பழுதுபார்த்துவந்தார். இதற்கிடையில் மற்றொரு சோதனையாக கடல் கொந்தளிப்பு காரணமாக படகின் நங்கூரம் உடைந்ததால், படகு அலையில் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்தார்.
இதனால் செய்வதறியாத தவித்த மீனவர்கள், ரப்பர் படகின் உதவியோடு இந்திய பெருங்கடலில் சாலமன் தீவுகளின் ஒரு பகுதியான ஐலே ஆங்கிலேஸ் என்ற இடத்தை அடைந்தனர். அங்கு படகில் இருந்த பொருட்களைக் கொண்டு உப்பு நீரின் மூலம் சில நாட்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்த தீவில் ஏராளமான தென்னை மரங்கள் இருந்துள்ளன. 15 நாட்கள் வரை தேங்காய் தண்ணீரையே குடித்து தாகத்தை தணித்துக்கொண்ட மீனவர்கள், தொடர்ந்து மழை பெய்ததால் மழைநீரையும் சேகரித்து வைத்து குடித்துள்ளனர். ஒரு வழியாக டிசம்பர் 23ஆம் தேதி அப்பகுதிக்கு வந்த ஐக்கிய ராஜ்ஜியம் கொடியை கொண்ட கப்பலை பார்த்த மீனவர்கள், தங்களை காப்பாற்றுமாறு சைகை காட்டினர். அங்கு சென்று அவர்களை மீட்டது அந்த கப்பல். 14 மீனவர்களும் ஜனவரி 2ஆம் தேதி இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மீனவர்களில் ஒருவரான டைட்டஸ் அதீத வெயிலால் பாதிக்கப்பட்டதால் ஆயுர்வேத சிகிச்சையில் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். மற்ற மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கத் கடலுக்கு சென்றுவிட்டனர்.