உறைய வைக்கும் குளிர்.. ரெட் அலெர்ட் எச்சரிக்கை.. நடுங்கும் வட மாநிலங்கள்!
இந்தியாவில் பல மாநிலங்களில் குளிர்காலம் உச்சநிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களை உறைய வைக்கும் விதமாக குளிர் அலை வீசி வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது. மிக மோசமாக குளிர் அடிக்கும் மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாநிலங்களில் தட்பவெப்ப நிலை 3-4 டிகிரி செல்சிஸ் அளவுக்கு குறையும் எனவும், பகல் நேர வெப்பம் கூட சராசரியாக 15-17 டிகிரி என்ற அளவில் குறைந்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புத்தாண்டுக்குப் பின்னர் குளிர் மற்றும் மூடு பனி பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை வேலைகளில் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முடக்கம் கண்டுள்ளன. டெல்லியில் கடும் குளிர் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு 15ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறையை நீடித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் காலம் என்பதால் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்நகரில் 700க்கும் மேற்பட்டோருக்கு நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதில் 98 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதிகாலை வேலையில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.