ஆளுநர் உரை முடிப்பதற்குள்…எதிரான தீர்மானம் எப்படி உடனடியாக ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டது?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சில வரிகளை தவிர்த்த நிலையில், அதற்கு எதிரான தீர்மானம் முதலமைச்சர் ஸ்டாலினால் எப்படி உடனடியாக கொண்டுவரப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆளுநர் உரையின் வரிகள் சட்டப்பேரவையில் உள்ள எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அவர் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட வரிகளை தவிர்த்ததால், தொடர்ந்து உரையை எல்இடி திரையில் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, ஆளுநர் உரையை டேப்லெட்டில் பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநர் சில வரிகளை தவிர்ப்பதை கவனித்தனர்.
ஆளுநர் 30 நிமிடங்கள் உரையாற்றியிருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் பேரவை செயலாளர் ஸ்ரீநிவாசனுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.45 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர் தனது உரையை காலை 10.48க்கு முடித்தார்.ஆளுநர் தனது உரையை முடித்த நிலையில், அதன் தமிழாக்கத்தின் சுருக்கத்தை, ஆளுநர் தவிர்த்த பத்திகளுடன் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அது காலை 11.31 மணிக்கு முடிவடைந்தது.இந்த இடைவெளியில் ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் தயாராகிவிட்டது.
முதலமைச்சரை சபாநாயகர் பேச அழைத்த நிலையில், நிலைமையை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எம்.எல்.ஏ.க்களுடன் அவையிலிருந்து வெளியேறினார். இதனிடையே, தமிழில் முழு பரிச்சயம் இல்லாத ஆளுநர், முதலமைச்சர் என்ன பேசுகிறார் என தனது உதவியாளரிடம் கேட்டறிந்தார்.
தனது உரைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அறிந்த ஆளுநர் உடனடியாக பேரவையிலிருந்து வெளியேறினார்.
ஆளுநர் வெளியேறுகையில் தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்ட நிலையில், பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர்.