தவிக்கும் சாலையோர மக்கள்! கடும் குளிரில் வடமாநிலங்கள்
வடமாநிலங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டுள்ளதால் வீடற்ற சாலையோர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக கடுமையான குளிர் ஏற்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதம் தொடங்கியது முதல் குளிரின் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் விமான சேவைகள், ரயில் சேவைகள், சாலை போக்குவரத்து என அனைத்தும் சரியான நேரத்தில் இயங்காமல் முடங்கியுள்ளது.
தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான பனிமூட்டத்தால் 50 மீட்டர் தொலைவில் இருப்பவர்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே தில்லி, ஹரியாணா போன்ற பெருநகரங்களில் வீடற்ற சாலையோர மக்கள் குளிரை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கடும் குளிரில் செய்வதறியாது சாலையோரம் உறங்கும் அவர்களின் புகைப்படங்கள் காண்போரை கலங்க வைக்கிறது.
மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய இருதய நோய் மற்றும் பக்கவாதத்தால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கலாம் எனத் தகவல்கல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள குளிரின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.