ஆளுநரை திமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் தாக்கிப் பேசக்கூடாது – மு.க.ஸ்டாலின்
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் சட்டமன்றத்திற்குள் நுழையும்போதே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு வாழ்க என முழக்கமிட்டனர். தொடர்ந்து, அரசின் கொள்கை விளக்கங்களை தனது உரையில் எடுத்துவைத்த ஆளுநர், திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதையும் தவிர்த்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் எனவும், கூடுதலாக ஆளுநர் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பாதியிலேயே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர்.
மரபை மீறி ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியதாக ராமதாஸ், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆளுநருக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுநரை கண்டித்து திமுக நிர்வாகிகள் போஸ்டரும் அடித்து ஒட்டியுள்ளனர்.
இதனிடையே நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம், அடுத்து முதலமைச்சர் பதிலுரை என சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆளுநரை தாக்கிப் பேசக்கூடாது என அறிவுறுத்தினார்.