நாடாளுமன்றத் தேர்தலை விரைந்து நடத்துக! – ஜே.வி.பி. வலியுறுத்து.
“இந்த அரசால் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. புதிய அரசால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“2022 ஆம் ஆண்டு போல்தான் 2023 ஆம் ஆண்டும். மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீர்ப்பதற்கான அறிகுறிகள் எவையும் இல்லை.
இந்தப் பொருளாதார, அரசியல், கலாசார சீரழிவில் இருந்து நாட்டை மீட்பதாக இருந்தால் இப்போது இருக்கின்ற சம்பிரதாய கட்சிகளுக்கு பதிலாக உண்மையான மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும்.
ஏதோவொரு வகையில் அந்த மக்கள் எழுச்சி கடந்த காலங்களில் எழுந்தது. அதன்முலம் முன்னாள் ஜனாதிபதியை மக்கள் விரட்டியடித்தார்கள். முன்னாள் பிரதமரை விரட்டியடித்தார்கள். பல அமைச்சர்களை விரட்டினார்கள். அரசு ஓரளவு சரி மக்கள் முன்னிலையில் மண்டியிடும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 75 வீதம் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இப்போது மீண்டும் 70 வீதத்தால் உயர்த்துவதற்குத் திட்டமிடுகின்றது.
இதற்கான அனுமதியை வழங்கும் தீர்மானம் ஒத்திப்போடப்பட்டாலும் கூட எப்படியும் அமைச்சரவை அனுமதி வழங்கும்.
இதைத் தாங்கும் நிலையில் மக்கள் இல்லை. இதனால் பல தொழில்சாலைகள் மூடப்படும். மக்கள் மேலும் தொழில்களை இழப்பர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகூட இந்த மாதம் கிடைக்கும் நிலையில் இல்லை. எதிர்வரும் மார்ச் மாதம் கூட கிடைக்காது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்கள் ஒன்றிணைந்த ஆட்சிதான். அதற்காக நாம் எதிர்பார்ப்பது நாடாளுமன்றத் தேர்தலையே.
அதைவிட்டுவிட்டு எல்லோரையும் ஒன்றுசேர வருமாறு அழைக்கிறார்கள். எதற்காக ஒருசேர வேண்டும்?
திருடர்களைத் தண்டிப்பதாக இருந்தால் – திருடர்கள் திருடிய பணத்தை மீளப் பெறுவதாக இருந்தால் – வீண்விரயத்தைத் தடுப்பதாக இருந்தால் நாம் ஒன்று சேரத் தயார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் அரசு நிச்சயம் தோல்வியடையும். அதற்குப் பின் அரசு கட்டாயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டி வரும்.
இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் ஊழல் மோசடிதான் என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன. நிலையான அரசின் மூலமாகவே பொருளாதாரத்தை நிமிர்த்த முடியும் என்று கூறுகின்றன.
அப்படியென்றால் நாடாளுமன்றத் தேர்தல் வேண்டும். அதன் மூலம் நிலையான அரசு அமைய வேண்டும்.
பொருளாதார பிரச்சினை இருப்பதால் தேர்தலை நடத்த முடியாது என்று அரசால் கூற முடியாது. தேர்தலை நாம் கேட்பதே பொருளாதார பிரச்சினையத் தீர்ப்பதற்குத்தான்” – என்றார்.