சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம்!

ஆளுநர் உரையுடன் நேற்று முன் தினம் சட்டமன்றம் கூடிய நிலையில் 3வது நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாக குற்றம்சாட்டினார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் போது எதன் அடிப்படையில் என குறிப்பிட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றால், எந்த சம்பவம் என குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.
உடனே எழுந்த முதலமைச்சர், “எடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என பேசுகிறார். அவருக்கு அனுமதி அளியுங்கள். நான் அதன் மீது பதிலளிக்கிறேன். அவர் ஆட்சியில் என்ன நடந்தது என்ற பட்டியல் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீரழிந்தது என்பதை நான் ஆதாரத்தோடு விளக்குகிறேன். அவர் பேசுவார் எனில், நானும் பேச தயார்” என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, தினம்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு குறுக்கிட்ட சபாநாயகர், அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.
அவருக்கு பேச அனுமதி கொடுங்கள் என முதலமைச்சர் தெரிவிக்க, ஆளும் கட்சி அனுமதி அளித்தால் தான் பேச அனுமதிக்கிறீர்கள் என சபாநாயகர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். உடனே எழுந்த முதலமைச்சர், இவ்வாறு சபாநாயகரை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இது மரபு அல்ல என்று கூறினார். இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக அவர்கள் தெரிவிக்கவில்லை என சபாநாயகர் கூற, “அவருக்கு பேச அனுமதி கொடுங்கள். பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் ஓடி ஒளிய தயாராக இல்லை” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார். எனினும் முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.