தமிழக அரசின் அழைப்பில் சுமந்திரன் மீண்டும் சென்னைக்கு!
சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறும் தமிழக அரசின் நிகழ்வில் பங்குபற்றுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் சென்னை பயணமானார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் சென்னையில் அயலக தமிழர் தின விழா நடைபெறுகின்றது.
அதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வதற்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பியான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தமிழக அரசால் அழைக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இலங்கை அரசுக்கும், தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் இந்தத் திகதிகளில் தொடர்ந்து நடைபெறும் என்ற ஏற்பாடு முன்னர் இருந்ததால், தமிழக அரசின் நிகழ்ச்சியில் சுமந்திரன் பங்குபற்றுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது.
ஆனால், கொழும்பு அரசு – தமிழர் தரப்பு இடையிலான பேச்சுக்கள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரம் தள்ளிப்போடப்பட்டதை அடுத்து, தமிழக அரசின் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு சுமந்திரன் எம்.பி. சென்னை பயணமானார்.
அவர் நாளைமறுதினம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரமும் சுமந்திரன் சென்னை சென்றிருந்தமை தெரிந்ததே.