“கட்டாயம் கைது..” வேங்கைவயல் சம்பவம் குறித்து முதலமைச்சர் உறுதி..!
புதுக்கோட்டை வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுதொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்து துறைகளிலும் சமூக நீதி எனும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோடையில் நடந்த நிகழ்வு கண்டிக்கத்தக்கது. வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது” என்று தெரிவித்தார்.
அந்த கிராமத்தில் தற்போது தினசரி டேங்க் லாரி மூலம் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் காலையும் மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், நோய் தடுப்பு பணிகளையும், மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் எடுத்துரைத்த முதலமைச்சர்,
“நீர்மாதிரி சேகரிக்கப்பட்டு அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கையை வரப் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும், 2 லட்சம் ரூபாய் செலவில் முற்றிலும் புதிய இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
மேலும், 7 லட்சத்தில் புதிய நீர்தேக்க தோட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், “ சிறப்புக் குழு அமைத்து 70 நபரிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நிகழ்வு சமூக வளர்ச்சி, ஒற்றுமைக்கு பின்னடைவாக அமைந்து விடுகிறது. சாதி, மதங்களை தூக்கிப்பிடித்து பிரிவினையை ஏற்படுத்தும் சமூக விரோதிகள் நாட்டில் உள்ளனர். நாம் அனைவரும் சம உரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் வாழ வேண்டும். கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.