சவால்களுடன் பதவியேற்ற பிரேசிலின் புதிய அரசுத் தலைவர்
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்பு மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் அமைதியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இறுதிக் கணம் வரைக்கும் பதவியேற்பு நடைபெறுமா என்ற ஒரு அச்சம் நிலவிய நிலையில் தொழிற் சங்கத் தலைவரும், முன்னாள் அரசுத் தலைவருமான லூலா டி சில்வா அரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பல இலட்சக் கணக்கான ஆதரவாளர்கள் தலைநகரில் குழுமி இருக்க, சுமார் 50 வரையான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவரின் பதவியேற்பு நடைபெற்றது. தென்னமெரிக்க நாடுகளான ஆர்ஜென்ரீனா, பொலிவியா, கொலம்பியா, சிலி, பரகுவே, உருகுவே ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களோடு போர்த்துக்கல் நாட்டின் தலைமை அமைச்சரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர். அவர்களோடு ஸ்பெயின் நாட்டு அரசரும், யேர்மன் நாட்டின் ஜனாதிபதியும் கூடக் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாகத் தலைமைப் பொறுப்பைக் கையளிக்க வேண்டிய முன்னாள் அரசுத் தலைவர் பொல்சனாரோ நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. பதவியேற்பு நடைபெற்ற யனவரி முதலாம் திகதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.
அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற கருத்துக்களைத் தெரிவித்து வந்தவர் பொல்சனாரோ. மின்னணு வாக்களிப்பு இயந்திரங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்த அவர், தேர்தல் திணைக்களத்தின் கண்காணிப்புக்கு அப்பால் தனித்த கண்காணிப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு இராணுவத்தைப் பணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டு ட்ரம்ப் என வர்ணிக்கப்படும் பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்த நாள் முதலாக இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இராணுவ முகாம்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பிரேசிலியாவில் உள்ள விமான நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் டிசம்பர் 24ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கிகள், ரவைகள், வெடிமருந்துகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டில் கலவரச் சூழலைத் தோற்றுவிப்பதன் ஊடாக இராணுவத் தலையீட்டை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கைதான முன்னாள் படைச் சிப்பாயும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருமான ஒலிவேரா சொய்ஸா, இன்றுவரை கைது செய்யப்பட்டிராத அவரது சகாவான அலன் டியாகோ ரொட்ரிகஸ் ஆகியோர் தனிப்பட்ட முறையிலேயே செயற்பட்டார்கள் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர்கள் அண்மைக் காலத்தில் நடைபெற்ற வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமை பதிவாகி உள்ளது. அது மாத்திரமன்றி, வலதுசாரி செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு உயர்மட்டக் கூட்டத்திலும் இந்த இருவரும் பிரசன்னமாகி இருந்துள்ளமைக்கான ஆதாரங்களும் கிட்டியுள்ளன.
எனவே, ஒரு மிகப் பெரிய சதித் திட்டத்தின் பங்காளிகளாகவே இவர்கள் இருந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.
இது தவிர, புதிய அரசுத் தலைவரின் பதவியேற்பு நடைபெற்ற அன்றைய தினத்திலும் குழுமியிருந்த மக்கள் மத்தியில் இருந்து ஒருவர் கத்தி மற்றும் பட்டாசு என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பரபரப்பான சூழலிலேயே அரசுத் தலைவர் பதவியேற்பு நடைபெற்று முடிந்துள்ளது.
பதவியேற்பு விடயத்திலேயே இவ்வளவு சங்கடங்களையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ள லூலாவின் அடுத்துவரும் 4 வருட ஆட்சிக் காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற அச்சம் அனைவர் மனதிலும் உள்ளது.
லூலா ஆட்சிக் கதிரையில் அமர்வது இதுவே முதல் முறையல்ல. பிரேசில் அரசுத் தலைவர்களிலேயே அதிக மக்கள் அபிமானம் பெற்றவர் எனக் கருதப்படும் அவர் 2003 முதல் 2010 வரை அரசுத் தலைவராகத் தொடர்ச்சியாக இரண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தவர். தனது பதவிக் காலத்தில் வறுமை ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் படுத்திச் சாதனை புரிந்தவர். பல மில்லியன் கணக்கான மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்ட அவர், பிரேசிலின் பொருளாதாரத்தையும் முன்னேற்றினார்.
ஆனால், அவர் ஆட்சியில் இல்லாத கடந்த 12 ஆண்டுகளில் பிரேசிலின் பொருளாதாரம் மீண்டும் சிதைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தனது பதவியேற்பின் போது உரையாற்றிய லூலா, தற்போதைய நிலையில் 125 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளதாகவும், 33 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தனது தலையாய கடமை எனத் தெரிவித்த அவர், கொரோனாக் கொள்ளை நோய்க் காலகட்டத்தில் முன்னைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கை காரணமாக மரணத்தைத் தழுவிய 680,000 க்கும் அதிகமான மக்களின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன்னர் நிறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி முன்னைய ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகள் காரணமாக அமேசன் காடுகளில் ஏற்பட்ட பாதிப்பைச் சீர்செய்யப் போவதாகவும் சூழுரைத்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும், மேலவையிலும் போதிய பலத்தைக் கொண்டிராத நிலையில் தான் நினைத்த அனைத்தையும் சாதிக்கும் வல்லமை லூலாவுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. அது மாத்திரமன்றி, மிக மோசமாகப் பிளவுபட்டுப் போயுள்ள பிரேசில் சமூகத்தை ஒரு இணக்கப்பட்டுக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய சவாலும் அவர் முன்பாக உள்ளது.
மறுபுறம், பிரேசில் நாட்டின் ஆயுதப் படையினர் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. பொதுவாகவே வலதுசாரிப் போக்கைக் கொண்டுள்ள அந்த நாட்டின் ஆயுதப் படையினர், கடந்த 4 வருட ஆட்சியில் பொல்சனாரோவின் வழிநடத்தலில் மேலும் வலதுசாரித் தனத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். பொல்சனாரோவுக்கு ஆதரவாக இராணுவத் தலையீட்டைக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை ‘மக்கள் எழுச்சி’ என வர்ணித்ததன் மூலம் தங்கள் கொள்கை எது என்பதை முப்படைத் தளபதிகளும் பிரகடனம் செய்து கொண்டார்கள்.
பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பிரேசில் உள்ளது. உலக அரங்கில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் உள்ள அந்த நாட்டை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் கூட பரிசீலனையில் உள்ளது. அத்தகைய நிலையில், அடிமட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற, அனுபவம் மிக்க ஒருவர் அந்த நாட்டின் தலைவராகப் பதவியேற்று உள்ளமை கவனத்துக்கு உரியதாகின்றது.
வல்லமை மிக்கவராக அவர் விளங்கினாலும், பிரேசில் நாட்டை ஒரு சிறந்த பாதைக்கு இட்டுச் செல்லக் கூடிய திறன் மிகுந்தவராக அவர் இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் மக்கள் ஆதரவு அடிப்படையிலும் அவர் எதிர்கொண்டுள்ள சவால்கள் அவரது அடுத்த 4 ஆண்டு காலப் பதவிக் காலத்தை சுமுகமாக நிறைவேற்ற உதவுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.