5 தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவு! – மலர்ந்தது கூட்டணி.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்தும் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒற்றுமையாக – கூட்டணியாக எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது என்று
அறியமுடிகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைசார் விடயங்களில் இந்த ஐந்து தரப்புக்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் பணியாற்றியிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பு விவகாரம், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயம் எனப் பல்வேறு விடயங்களில் ஒருமித்துச் செயற்பட்டிருந்தன. இந்தக் கூட்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ளதால், ஏனைய 5 கட்சிகளும் ஒன்றிணைந்து – ஒரு குடையின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்துள்ளன.
எந்தக் கட்சி, சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளருடன் 5 கட்சியினரும் கலந்துரையாடி முடிவு எடுக்கவுள்ளனர்.